கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாச்சியார்புரத்தில் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கோசலை. இடைநிலை ஆசிரியராக பானுமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.
அந்த பள்ளியில் நிர்வாக செயலாளர் பிரச்னை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 29 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஊதியம் வழங்க ஏதுவாக நேரடி மானியம் வழங்க வேண்டி கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் மனு அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை இது குறித்து கேட்டும், எந்தவித நடவடிக்கையும், சரியான பதிலும் இல்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொருளாளர் சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி, வட்டாரத் தலைவர் செந்தில்குமரன், வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார், வட்டார பொருளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி மாவட்ட அலுவலரும், வட்டார கல்வி அலுவலரும் வேண்டும் என்றே கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கமால் தாமதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu