விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தும் அரசு.. விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு...

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தும் அரசு.. விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு...
X

கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநில பொருளாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏப்ரல் 5 ஆம் தேதி புதுடெல்லியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கக் கூடிய பாராளுமன்ற முற்றுகைப் போரட்டம் நடத்துவது என்று அகில இந்திய அமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான பயண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

9 ஆண்டு காலமாக மத்திய அரசு கடைபிடித்து வரக்கூடிய கொள்கைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

முழுவதும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒரு அணுகுமுறையையும், கொள்கையையும் தான் மத்திய அரசு கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் கடும் வரி விதிப்புக்கு உள்ளாவதும், பெரிய முதலாளிகள் மற்றும் பெரும் கார்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கத்தின் நிதி மூலதனத்தை வாரி வழங்குவது என்கிற ஒரு போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது.

எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்ற முறையில், 200-க்கும் மேற்பட்ட நடைபயண குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாகத்தான் ஏப்ரல் 5 ஆம் தேதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற இருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை பணி, சிப்காட் போன்ற பல்வேறு பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் வளர்ச்சி பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.

அதற்கு நேர் எதிர்மாறாக காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலம் நிலத்தை கையகப்படுத்துகிற ஒரு அடாவடித்தனமான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உண்மையான சந்தை விலைக்கு ஏற்றவாறு மாநில அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்குமான மோதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க மாநில அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி பயிர்களை வனவிலங்குகள் நாசம் செய்தால், பாதிப்புக்கு ஏற்றவாறு அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அரசு முழுமையாக இழப்பீடு வழங்கும் என்று சொன்னால், விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் தான், விவசாயிகள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் மட்டுமே தமிழக அரசு வழங்குகிறது. இதனை ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

கேரளா மாநிலத்தில் பயிர்களை அழிக்கக்கூடிய வனவிலங்குகளுக்கு விவசாயிகள் நாட்டு வெடிகுண்டு வைப்பதற்கு கேரளா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தில் அரசாணை பிறப்பித்து, வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நேரடியாக தண்ணீரை அனுப்புவது சட்ட விரோதம். எந்தவொரு அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு நேரடியாக தண்ணீர் அனுப்புவது என்பது தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.

விவசாயத்துக்காகத்தான் அணை கட்டப்பட்டது. ஆனால் சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு அணையில் உள்ள நீர் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் பல வட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட பயிர்களின் அடிப்படையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் கல்குவாரிகள் சட்ட விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான எந்த தீர்வும் முதல்வர் வெளியிட்டிருக்கக் கூடிய புதிய கொள்கையில் இல்லை. மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், வாழ்வுரிமை உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக புதிய கொள்கை இருக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படக்கூடிய அனைத்து குவாரிகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகம் தெரிவித்தார்.

Tags

Next Story