தமிழையும், வைகோவையும் பிரிக்க முடியாது : வைகோவின் மகன் துரைவைகோ
வைகோ மகன் துரைவைகோ விளையாட்டு சிறுவர்களுடன் பேசினார்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் உள்ள தனியார் விளையாட்டு பயிற்சி மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோவின் மகன் துரைவைகோ கலந்துரையாடினார். விளையாட்டு முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தது மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள விளையாட்டு வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடினார்.
பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விளையாட்டு என்பது பதக்கம் பெறுவது மட்டுமல்ல, வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை கொடுக்கிறது. உடல்வலிமை, தன்னம்பிக்கை, தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை, நேரம் கடைபிடிப்பு போன்ற மன ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றை விளையாட்டு கொடுக்கிறது.விளையாட்டு குழந்தைகளின் கல்வி படிப்பினை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் தவறான எண்ணத்தில் உள்ளனர். நானே டென்னிஸ் வீரரின் தந்தையாக இருந்துள்ளேன். எனது மகன் 2வது ஆண்டு கல்லூரியில் படிக்கிறார். அவர் சிறு வயதில் இருந்து டென்னிஸ் விளையாடி வருகிறார். இந்தியா அளவில் முதல் 10 இடங்களில் இருந்தார்.
தமிழகத்தினை பொறுத்தவரை முதலிடம் பிடித்தார். விளையாட்டு வீரராக இருந்தால் இன்றைக்கு வரை அவருக்கு பல விஷயங்களில் கைகொடுக்கிறது.விளையாட்டு கல்விக்கு உதவியாக இருக்குமே தவிர இடையூறாக இருக்காது. விளையாட்டு பயனுள்ளதாக இருக்கும் என்பதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கிராமப்புறங்களில் விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை, கண்மாய், விளை நிலங்களில் தான் விளையாடி வருகின்றனர். விளையாட்டு பயிற்சிகளுக்கு தேவையான வசதிகள் நம்மிடம் இல்லை, புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சுழல் மற்றும் விளையாட்டு துறையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார்.
விளையாட்டு துறையில் உள்ள குறைகளை புதிய அரசு போக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோவில்பட்டி பகுதியை பொறுத்தவரை ஹாக்கி, பளுதூக்குதலில் நட்சத்திர வீரர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் பல கோரிக்கைகள் வைத்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளையாட்டு துறையில் இளைஞர்கள் சாதிக்க தேவையான உதவிகளை செய்து, தேசிய, உலகளவில் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர்.விளையாட்டு துறையில் இளைஞர்கள் கவனம் செலுத்த தொடங்கினால் போதை உள்ளிட்ட தவறான பழக்கத்திற்கு செல்லமாட்டார்கள்.
தேர்வில் தோல்வி அடைந்தால் தவறான முடிவுக்கு மாணவர்கள் செல்லும் நிலை உள்ளது. தோல்வி ஏற்றுக்கொள்ளும் நிலை இன்றைய இளைஞர்களுக்கு இல்லை. விளையாட்டில் கவனம் செலுத்தினால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்கவத்தினை கொடுக்கிறது. பிற்காலத்தில் கல்வி, தொழில், வேலை என தோல்வியை சந்தித்தாலும் எந்த கவலையும் இருக்காது, உறுதியான மனிதராக உருவாக்க விளையாட்டு உதவுகிறது.தமிழையும், வைகோவையும் பிரிக்க முடியாது, 2015ல் முதல் மத்தியரசு வழங்கமால் இருக்கும் செந்தமிழ் அறிஞர் விருது வழங்க நாடாளுமன்றத்தில் வைகோ குரல் கொடுப்பார் என்றார்.
அப்போது மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயக ரமேஷ், மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, சரவணன், மாவட்ட துணை செயலாளர் பவுன்மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்.கணேசன், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள் டி.வி.சிவக்குமார், கோடையாடி ராமசந்திரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், நகர இளைஞரணி செயலாளர் லவராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu