மதுரை- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியல்: போலீசார் தடியடி
கோவில்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 313 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் குவிந்தனர்.
இந்த விழாவில் பங்கேற்பவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் நுழைவு வாயில் பகுதியில் சிலர் ஏறி சமுதாய கொடியை ஏற்றி உள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை கீழே இறக்கி விட்டனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மறியலில் ஈடுபட வேண்டாம் என காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் கலைந்து போக சொன்னார்கள். விதிமுறையை மீற வேண்டாம் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும், மறியலில் ஈடுபட முயன்றவர்கள் சாலையில் இருந்து கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஏற்படாத வண்ணம் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu