கோவில்பட்டி போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்
போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் பேசினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் விநியோகம், விழிப்புணர்வு நாடகம், குறும்படம் மூலம் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் கே.ஆர் .சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக வேண்டாம் போதை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கலந்துகொண்டு, பள்ளி மாணவ மாணவியர்கள் இடையே போதைப் பொருள்களான கஞ்சா, புகையிலை, மது, உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்துவது குறித்தும் அவர் பேசினார்.
மேலும், தங்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எனவே அவர்களது கனவை நிறைவேற்றுவதும் உங்கள் கடமை என்று மாணவர்கள் மத்தியில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் பேசினார்.
மேலும், நிகழ்ச்சியின்போது, அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் பிரவீன் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதற்காக எவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்து பெற்றோர்கள் வருகிறார்கள் என்று கூறும்போது பள்ளியில் உள்ள சில மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
இந்த நிகழ்ச்சியில், நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி, கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu