கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
கோவில்பட்டியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைசச்ர் கீதாஜீவன் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
முகாமை, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4.99 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, மூக்கு கண்ணாடி, திறன்பேசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தமிழ்நாடு முதல்வர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் பட்ஜெட்டின்போது ரூ.1200 கோடியும் பின்னர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி பயனாளிகள் நலத்திட்டங்கள் பெறுவதில் உள்ள குறைகளை களைவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், நலத்திட்டங்கள் உரிய நபருக்கு சென்றுசேர வேண்டும் என்பதில் அவர் அக்கறை செலுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் 42,727 பேர் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஆனால், மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை 21337 பேர்தான் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையினை ரூ.1000 பெற்றவர்களுக்கு ரூ.1500ஆகவும், ரூ1500 பெற்றவர்களுக்கு ரூ.2000 ஆகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். மூன்று சக்கர வாகனம், உதவி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை பெறுவதற்கு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.
தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், நடமாட முடியாதவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 92 பேர் பயன்பெற்றுள்ளனர். மேலும், 53 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றில் வாரம்தோறும் வியாழக்கிழமையும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமையும் நேரில் சென்றால் அடையாள அட்டை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து வசதிகளுடன் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், வட்டாட்சியர்கள் லெனின், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu