கோவில்பட்டியில் லாரியில் ரகசிய அறை அமைத்து 600 கிலோ கஞ்சா கடத்தல்

கோவில்பட்டியில் லாரியில் ரகசிய அறை அமைத்து 600 கிலோ கஞ்சா கடத்தல்
X

கோவில்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

கோவில்பட்டி அருகே லாரியில் ரகசிய அறையில் அமைத்து 600 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற மத போதகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்னை பதிவு எண் கொண்ட மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை நிறுத்தி தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள முயன்றனர். அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது, அந்த லாரியில் ரகசிய அறை அமைத்து தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து லாரியில் இருந்த 3 பேரையும் பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடிக்கு கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்டது தெரிய வந்தது. இதையெடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புத பாரத் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்தி பாபு ( 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், மினி கண்டெய்னர் லாரியில் 300 பாக்கெட்டுகளில் கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா மற்றும் மினி கண்டெய்னர் லாரியையும் தனிப்படை பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு மற்றும் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரியின் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story