கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா
X

கோவில்பட்டியில் சிறுதானிய உணவுகளை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவிகள்.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சிறுதானிய ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. உணவு திருவிழாவில் பள்ளி சத்துணவியல், மனையியல் பிரிவு மாணவிகள் குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, பனிவரகு, கொள்ளு, எள்ளு, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களில் இருந்து பொங்கல், வடை, உப்புமா, பணியாரம், சாத வகைகள், பாயாசம், கொழுக்கட்டை, இட்லி, தோசை, பக்கோடா, புட்டு, முளை கட்டிய தானியங்கள், அல்வா, லட்டு, அதிரசம், பிரியாணி என நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.மனையியல் பிரிவு ஆசிரியர் அன்னமரியாள் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குமர் ஜெயக்குமார் அலைபேசி வாயிலாக, பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின், உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் உள்பட மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story
ai in future agriculture