என் மகனை சுட்டு விடுங்கள்: முன்னாள் ராணுவ வீரர் ஆவேசம்

என் மகனை சுட்டு விடுங்கள்: முன்னாள் ராணுவ வீரர்  ஆவேசம்
X

தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவவீரர்

கோவில்பட்டியில் ராணுவ வீரர் எனது மகனை சுட்டு விடுங்கள் என ஆவேசப்பட்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கோவில்பட்டியில் மகனை விசாரணைக்கு போலீஸார் அழைந்து சென்றதைக் கண்டித்து என் மகனை சுட்டுவிடுங்கள், எங்களையும் கொன்று விடுங்கள் என்று முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த தனது மகனை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்து சென்று பொய் வழக்கு போட முயற்சி செய்வதாக கூறி கோவில்பட்டி ஜெ.எம்.-1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்பு முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றபோது போலீஸார் அவரை தடுத்து, மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரம் கவுண்டன்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் பரமசிவம். முன்னாள் இராணு வீரர். இவரது மகன் பொன்னுமுத்துபாண்டி(29). இவர் கோவில்பட்டி பாரதிநகரில் வசித்து வருகிறார். கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, எட்டயபுரம், சங்கரலிங்கபுரம், தேவர்குளம் உள்ளிட்ட காவல்நிலையங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு காவல் நிலையம் என பல்வேறு காவல் நிலையங்களில் பொன்முத்துபாண்டி மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த பொன்னுமுத்துபாண்டியை அவரது குடும்பத்தினர் ஜாமீனில் வெளியே எடுத்தனர். தினமும் கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருந்த காரணத்தினால், தினமும் பொன்முத்துபாண்டி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

இன்று பொன்முத்துபாண்டி கையெழுத்து போட வந்த போது, அவர் மீது வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஜாமீன் கையெழுத்து போட வந்த தனது மகனை போலீஸார் கைது செய்து சென்ற விட்டதாகவும், தன் மகன் மீது வேண்டும் என்றே பொய்யான வழக்கு போடப்படுவதாக கூறி பொன்முத்துபாண்டியின் தந்தை பரமசிவம் திடீரென, கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி பாரதிதாசன் முன்பு திடீரென மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் போலீஸார் பரமசிவத்தினை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தனது மகன் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதாகவும், தன் மகனுக்கு ஜாமீன் எடுக்கவே சிரமப்பட வேண்டி இருப்பதாகவும், தனது மகனை சுட்டு கொன்று விட்டு, தங்களையும் கொன்றுவிட சொல்லுங்கள் என்று மகனுக்காக தீக்குளிக்க முயன்ற முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம் கூறினார்.

இது குறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, பொன்முத்துபாண்டி மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தற்பொழுதும் ஜாமீனில் வந்த பிறகு வழிப்பறியில் ஈடுபட்டதாக வந்த புகார் வந்த காரணத்தினால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை கண்டித்து முன்னாள் இராணுவ வீரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story