கழுகுமலையில் டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
கழுகுமலையில் பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களில் குடிநீரைத் திரும்ப நிரப்பி விற்பனை செய்த மதுக்கூடம் மூடி சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்களில் மீண்டும் தண்ணீர் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கழுகுமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் வளாகத்தில் உள்ள திண்பண்டங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், கயத்தாறு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று (12.04.2023) திடீர் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் போது, கழுகுமலை செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையுடன் இணைந்துள்ள திண்பண்டங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடத்தில் ஏற்கெனவே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களில், மீண்டும் குடிநீரை நிரப்பி, புதிய குடிநீர் பாட்டில்களாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட 117 லிட்டர் அளவிலான பயன்படுத்திய பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும், 2 கிலோ மூடிகளும், பல காலியான பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சுப்பிரமணி என்பவர் ஏலத்தில் எடுத்திருந்த அந்த டாஸ்மாக் மதுபானக் கூடமானது, பொதுமக்களின் பொது சுகாதார நலன் கருதி உடனடியாக மூடி முத்திரையிடப்பட்டது.
அது போல, குட்டிப்பேட்டையில் முனியாண்டி என்பவர் ஏலம் எடுத்திருந்த டாஸ்மாக் மதுபானக்கூடத்திற்கும், ஆறுமுகநகரில் உள்ள சேர்வகாரத்துரை என்பவர் ஏலம் எடுத்திருந்த மற்றொரு டாஸ்மாக் மதுக்கூடத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத்தினால், அவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
மேலும், டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களில் பாதுகாப்பான உணவும், குடிநீரும் வழங்கிட வேண்டும் எனவும், உணவு வழங்கும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. தவறும்பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
மேலும், உணவு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நுகர்வோர்கள் புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu