சசிகலாவை நாங்களும் சந்திப்போம் - அமைச்சர் கடம்பூர் ராஜு
அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி மறைமுகமாக கூறியுள்ளார் எனவும் நாங்களும் சசிகலாவை சந்திப்போம் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகளான வடக்கு சுப்பிரமணியபுரம், தெற்கு சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பல்வேறு நல்லத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி தமிழகத்தில் பேசக்கூடிய அளவிற்கு சிறப்பான வெற்றியாக இருக்கும். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். எந்த இடத்திலும் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும். தீயசக்தி திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று தான் கூறியுள்ளாரே தவிர, இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம் என சசிகலா கூறவில்லை.
சசிகலா கோவிலுக்கு வரும் போது சிலர் அவரை சென்று பார்க்கின்றனர். நாங்கள் கூட சென்று அவரை பார்ப்போம். சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை விட்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக அவர் கூறியுள்ளார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல மனிதர் என்று சான்றிதழ் கொடுத்த டி.டி.வி.தினகரன் தற்போது மாற்றி பேசினால் யார் நாக்கு மாறிப்பேசுகிறது என்பதை அவரது கேள்விக்கு விட்டுவிடுகிறேன் என்றார் .
தொடர்ந்து, வேட்பாளர் கடம்பூர் செ.ராஜூ கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட செட்டியார்தெரு, மூப்பனார்தெரு, நாடார் தெரு, தேவர் தெற்கு தெரு, தேவர் காலனி, பாரதி நகர், கட்டபொம்மன் தெரு, மேலத்தெரு, கடம்பூர் ரோடு, வடக்குத் தெரு, மருத்துவர் காலனி மற்றும் அரசன்குளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் கயத்தாறு ஒன்றிய அதிமுக செயலர் வினோபாஜி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலர் செல்வக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu