கோவில்பட்டி நகைக்கடையில் கொள்ளை.. போலீஸார் விசாரணை

கோவில்பட்டி நகைக்கடையில் கொள்ளை.. போலீஸார் விசாரணை
X

விசாரணை நடத்தும் போலீசார்.

கோவில்பட்டி அருகே நகைக் கடையில் பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (38). இவர் எட்டயபுரம் பிரதான பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் அவர் வெளியூர் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், இன்று மாலையில் அவரது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அய்யனாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்குள் இருந்த கேமராக்கள் திசை மாற்றி திருப்பப்பட்டிருந்தன.

கேமரா பதிவுகளை சேமிக்கும் டி.வி.ஆர். மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அதேபோல் கடைக்குள் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த வெள்ளி கொலுசுகள், வெள்ளிக் கொடி தண்டைகள் மற்றும் பழைய வெள்ளி பொருட்கள் என சுமார் 7, கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன.

மேலும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியில் கைப்பிடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. அதனை மர்ம நபர்களால் திறக்க முடியாததால் தங்க நகைகள் தப்பின என்பது தெரிய வந்தது. தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!