மழைநீரை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மழையால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி திருமால்நகர், கணேஷ் நகர், சிங்கப்பூர் ராமையா நகர், ஆசிரியர் காலனி. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், சில வணிக நிறுவனங்களும் உள்ளன. சிறிய மழை பெய்தால் கூட இந்த பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்த போது மழை நீர் குளம் தேங்கி அவசர தேவைக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திருமால்நகர், கணேஷ் நகர், சிங்கப்பூர் ராமையா நகர் பகுதியில் வழக்கம் போல மழை நீர் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து குளம் போல காட்சியளிக்கிறது.
மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் அதிகளவு துர்நாற்றத்துடன் மக்கள் வசிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு வர வேண்டும் என்றால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து தான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றவர்கள் உதவி இல்லாமல் வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு அவசரத்திற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் தத்தளித்து வருகின்றனர்.
கோடை காலத்தில் பெய்த லேசான மழைக்கே இந்த நிலைமை என்றால், மழைக்காலங்களில் எங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்று வேதனையுடன் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு மேல் மழைநீர் சூழ்ந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் வராமல் இருப்பதை கண்டித்தும் தங்களுடைய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடலையூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவில்பட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதையடுத்து கோவில்பட்டி தாசில்தார் அமுதா, டி.எஸ்.பி. பழனிக்குமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அலெக்சாண்டர் ஆகியோர் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். தற்காலிகமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu