நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கீதாஜீவன் நிவாரண உதவி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11). இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவரும். இவரது தம்பி அருண்குமார் (7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாடச் சென்றனர்.
இந்நிலையில், கண்மாயில் மூழ்கி மூன்று சிறுவர்களும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கிராமத்து இளைஞர்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி மூன்று சிறுவர்களின் சடலங்களையம் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்ட போலீஸார் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மூன்று சிறுவர்களின் சடலமும் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிவலார்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்த சிறுவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்சத்துக்கான காசோலைகளை சிறுவர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu