மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
கோவில்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கயத்தாறு ஆத்திகுளம், இந்து நகர், உள்ளிட்ட கிராம பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கயத்தாறு தியாகராஜ பாகவதர் தெருவை சேர்ந்த வேலு என்பவர் வீடும், பாரதி நகர் நடுத்தரவைச் சேர்ந்த கிருஷ்ணர் என்பவர் வீடும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து இருந்தது.
அதை நேரில் பார்வையிட்டடு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து சொந்த நிதி உதவி வழங்கினார் மேலும் அரசு சார்பில் விரைவில் வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும் என அவர்களிடம் கடம்பூர் ராஜூ உறுதி அளித்தார். தொடர்ந்து, கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் பெய்த கனமழையால் ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மேலும், கயத்தாறு பேரூராட்சி பகுதியில் மூன்று வீடுகள் இடிந்துள்ள நிலையில் அந்த வீடுகளை பார்வையிட தற்போது வரை அதிகாரிகள் வராதால் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி மகாலட்சுமி நகர் பகுதியில் அத்தைகொண்டான் கண்மாய் நிறைந்து அந்த பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அத்தைகொண்டான் கால்வாய் கடந்த ஆட்சியில் சீர் செய்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்தப் பகுதி மக்களை திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu