கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

கோவில்பட்டி வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறையாக கால்நடை பராமரிப்பு கடன் வழங்காததை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக திமுக மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பீக்கிலிப்பட்டி முருகேசன் ஒருதலை பட்சமாக செயல்படுவாதகவும், கால்நடை பராமரிப்பு கடனை சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், கடன் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு கூட்டுறவு சங்க செயலாளர் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், வரதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஒருதலைபட்சமாக செயல்படும் வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, கால்நடை பராமரிப்பு கடன் கேட்டு விண்ணப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். பாகுபாடின்றி கடனுதவி வழங்க வேண்டும். கடன் வழங்கும் விவகாரத்தில் முறையின்றி செயல்படும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், 90 ஆயிரம் கடன்தொகை பெற ரூ. 5 ஆயிரம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் கடன் வழங்குவதில் பாகுபாடு பார்க்கும் செயலில் ஈடுபட்டால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil