எட்டயபுரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ரணசூர் நாயக்கன்பட்டி கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டையபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தில் 80 சதவீதம் மக்கள் பட்டியலின அருந்ததியர் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த இரண்டு மாத காலமாக முறையாக பஞ்சாயத்து நிர்வாகம் தங்களுக்கு குடிநீர் தர வழங்கவில்லை என்றும் இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி பின்பு குடிநீர் வழங்கினர் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடந்த 10 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் திறந்து விடுவதில்லை என்றும் இது சம்பந்தமாக சுரைக்காய்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று முறையிட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறி எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியபடி பாய் மற்றும் தலகாணியுடன் படுத்து உறங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையெடுத்து, போராட்டம் நடத்திய கிராம மக்களுடன் எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் கண்ணா, எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்ககள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்துக்காக ஏராளமானோர் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu