கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டம்
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் சாதனைகளை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி நகரின் மையத்தில் அவருக்கு, கி.ரா.நினைவரங்கம் என்ற பெயரில் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
மக்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்துள்ள அந்த அரங்கத்தை பொது மக்களும் நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர். கோவில்பட்டி பகுதிமட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சாத்தூர், தென்காசி பகுதிகளில் இருந்து மக்கள் கி.ரா.நினைவரங்கத்தினை பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், கி.ரா. நினைவரங்கத்தில் சில அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக குடிநீர் வசதி இல்லை என்றும் நினைவரங்கத்துக்கு வரும் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நினைவரங்கத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள் காய்ந்து சருகு போன்று காட்சியளிக்கிறது என்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் காலை, மாலை புல்வெளியில் தண்ணீர் விட்டாலும், பசுமை இல்லமால் காய்ந்த சருகு போன்று காட்சியளிக்கும் நிலை இருப்பதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நகரின் மையப் பகுதியில் காட்சியளிக்கும் கி.ரா. நினைவரங்கத்தில் குடிநீர் வசதி, மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், கி.ரா நினைவு அரங்கத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காலிகுடங்களுடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு, அக்கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, நகர பொருளாளர் செண்பகராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர துணைத் தலைவர்கள் வின்சென்ட், சுப்புராஜ், நகரச் செயலாளர்கள் மணிமாறன், சரவணன், இளைஞரணி துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்து, கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu