கோவில்பட்டியில் தாமதமின்றி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி நூதனப் போராட்டம்
கோவில்பட்டியில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொது தேர்வுகள் முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கும் கல்விக்காக அரசு வழங்கும் உதவிகளை பெறுவதற்கும் குடியிருப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் என ஆவணங்கள் தேவைப்படுகிறது.இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
இருப்பினும், தமிழகம் முழுவதும் சில தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கும் பணியில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்வதாகவும், ஆன்லைனில் பதிவு செய்தாலும் நேரில் பார்த்தால் மட்டும் தான் விரைந்து சான்றிதழ் வழங்கப்படும் என்ற நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனைக் கண்டித்தும், சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.
மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu