கோவில்பட்டியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நூதனப் போராட்டம்
கோவில்பட்டியில் கட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நீதிமன்றங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கோவில்பட்டி உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், கருவூலம், பி.எஸ்.என்.எல் என மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு செல்லும் இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், விரைந்து அந்த சாலை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்கள் கட்டி தர வேண்டும், அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை முற்றிலும் அகற்றி விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது.
பல்வேறுகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டில்கள் போட்டு படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கட்டில்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அவர்களை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கட்டில்களை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியது மட்டுமின்றி கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu