தீக்குச்சி தயாரிப்பு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்தினர் போராட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுடுத்து, உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் நான்கரை லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறினர்.
விபத்து நிகழ்ந்த தினமே மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாரியம்மாள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து மாரியம்மாள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய மீதித்தொகையான ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்க கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டியின் மகள்கள் தங்களது குடும்பத்தினருடனும், சி.ஐ.டி.யு. தொழில்சங்க அமைப்பினருடனும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் தெய்வேந்திரன், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்முருகன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முத்துக்காந்தாரி உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் மீதித் தொகையான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையை வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மூதாட்டி மாரியம்மாள் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் நாகலெட்சுமி உடனிருந்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu