கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளிக்குப் பின் கூலி உயர்வு

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளிக்குப் பின் கூலி உயர்வு
X

கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவில்பட்டி பகுதியில் பணிபுரியும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளிக்குப் பிறகு கூலியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொது மகா சபைக் கூட்டம் சிதம்பரநாடார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க சாத்துார் கிளை தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார். கூட்டத்தில், உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். வரும் தீபாவளிக்கு வழக்கம்போல் போனஸ் வழங்க முடிவு செய்து இருக்கிறோம். தீப்பெட்டிக்கு விலையை அதிகரிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சீனா சிகரெட் லைட்டர்கள் வந்து தடையில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது.

சிகரெட் லைட்டர் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் தெரிவித்தோம். அதை கவனத்தில் கொண்டு வந்து ரூ. 20-க்கு குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை கொடுத்தார்கள். ஆனாலும்கூட சட்டப்படி வராமல் சட்டவிரோதமாக முன்பைவிட அதிகமாக நேபாளம் வழியாக வந்து ரூ. 10-க்கு விற்கப்பட்ட லைட்டர் ரூ. 15-க்கு ஏகபோகமாக விற்பனை நடந்து வருகிறது.

இதனால், தீப்பெட்டி பண்டல் விலையை கூட்டமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்றுமதி தொழிலிலும் சுணக்கம் வந்துவிட்டது. நைஜர் நாட்டில் உள்ள துறைமுகத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், அந்த நாடு வழியாக 7 நாடுகளுக்கு செல்லவேண்டிய தீப்பெட்டிகள் ஸ்தம்பித்து போய்விட்டது. ஏற்றுமதியும் ஸ்தம்பித்து உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த தருணத்தில், போனஸ் கொடுக்க வேண்டும். மேலும், கூலியை உயர்த்தி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்களை நம்பி இருக்கிற தொழிலாளர்களுக்கு போனசும், தீபாவளிக்குப்பின் கூலி உயர்வு வழங்க உள்ளோம். எங்களுக்கு மின் கட்டணம் பெரிய சுமையாக உள்ளது.

தமிழக முழுவதும் போராட்டங்கள் நடந்தால்கூட நாங்கள் அரசை நம்பி இருக்கக்கூடியவர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அரசுக்கு அணுசரணையாக இருந்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டங்களில் ஈடுபடவில்லை. அரசு மின்கட்டணத்தை மறு சீராய்வுக்கு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் வைத்துள்ளோம் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!