குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
தரமற்ற குடிநீர் பாட்டில்கள் ஏற்றி சென்ற வாகனத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு தரமற்ற உணவுகள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் அடங்கிய குழுவினர், நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நாலாட்டின்புதூர் பகுதியில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துகொண்டிருந்த வாகனத்தை ஆய்வு செய்தபொழுது, வாகனத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், தண்ணீர் அடிப்படையிலான பானம் என்ற பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டும் பாட்டிலில் அடைத்து, பி.ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ) சான்றிதழும், உரிய லேபிள் விபரங்களுமின்றி இருந்ததும் கண்டறியப்பட்டது.
எனவே, 7 லட்சம் மதிப்புள்ள வாகனமும், 1330 லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கழுகுமலை பகுதியில் வேல்கொடி பார் என்ற டாஸ்மாக் கடையுடன் இணைந்த பாரில் ஏற்கனவே பயன்படுத்திய பாட்டிலில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்ததும், அச்சிட்ட காகிதங்களையும், அனுமதியற்ற பிளாஸ்டிக் டம்ளர்களையும் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வைத்திருந்ததால், பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சுகாதாரமற்ற வகையில் உணவுப் பொருள் வைத்திருந்ததால், அவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகளின் கீழும் அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்கால ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்குற்றத்திற்காக அந்த பாரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu