ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் உள்ள தமிழகம் உருவாக வேண்டும்.. அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக தற்போது 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக தாய்மார்களுக்கு இதை வழங்க உள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சரிபார்க்கப்பட்டு அவர்களுடைய உயரம், உயரத்திற்கேற்ற எடை, இல்லையென்றால் வயதுக்கேற்ற வளர்ச்சி போன்றவை அங்கன்வாடிகளில் சரி பார்க்கப்பட்டபோது கிட்டத்தட்ட 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டது.
அதற்கு காரணம் தாய் வயிற்றில் இருக்கும் பொழுது சரியான ஊட்டசத்து கிடைக்கப் பெறாதது தான் என தெரியவந்தது. கர்ப்பமாக இருக்கும் காலத்திலேயே சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழங்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்ற சத்தான உணவுகளை உட்கொண்டால்தான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.
பிறக்கும் குழந்தைகள் 3 கிலோ எடை உள்ளதாக இருக்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் பொழுது தான் அவர்களுக்கு நல்ல அறிவாற்றல் கிடைக்கும். அறிவாற்றல் மிக்க குழந்தைகளாக இருக்க வேண்டும் என்றால் கருவுற்றதில் இருந்து ஆயிரம் நாட்கள் மிகவும் கவனமாக இருந்து குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
இதுபோன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் உள்ள தமிழகமாக இருக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இலக்கு என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மகளிர் திட்ட இயக்குநர் வீரபுத்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலெட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu