விஸ்வரூபம் எடுக்கும் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய விவகாரம்.. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...

விஸ்வரூபம் எடுக்கும் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய விவகாரம்.. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...
X

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. ரயில் வசதி மற்றும் பேருந்து வசதி அதிகளவு உள்ளதால் கோவில்பட்டி நகரில் மக்கள் தொகையும், மக்களுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், வெளியூர்களில் இருந்து கோவில்பட்டி வருவோருக்கு வசதியாக கட்டப்பட்ட கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் எந்தவித பயனும் இல்லாமல் இருப்பதாகவும், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் வருவோர் கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் இறக்கிவிடப்படாமல் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிடப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


அதாவது, மதுரை வழிதடத்தில் வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோவில்பட்டி நகருக்கு வருவதற்கு தோட்டிலோவன்பட்டி விலக்கு வழி, ஆவல்நத்தம்-மூப்பன்பட்டி விலக்கு அருகே உள்ள பாதையை பயன்படுத்தி சர்வீஸ் சாலை வழியாக வர வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஆனால், தற்போது ஆவல்நத்தம்-மூப்பன்பட்டி விலக்கு முன்பாக பாலத்தின் அருகில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாதை வழியாக பேருந்துகள் எளிதில் உள்ளே வந்து , இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்திற்கு செல்லும் பாதை அல்லது சர்வீஸ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பயணிகளை இறங்கி விட்டு, சாய்பாபா கோயில் எதிரே உள்ள பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று செல்ல முடியும்.

இதனால் அவர்களுக்கு எந்தவித காலதாமதமும் ஏற்படாது. அதே போன்று நெல்லை வழிதடத்தில் இருந்து வரும் பேருந்துகள் கூடுதல் பேருந்து நிலையம் வந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பயணிகள் இறக்கிவிடும் சூழல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்:

இந்த நிலையில், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்று வர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.


திருநெல்வேலி - மதுரை வழிதடங்களில் இருந்து செல்லும் தொலை தூர பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பஸ்கள், நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்த்து கூடுதல் பேருந்து நிலையம் வளாகத்திற்குள் சென்று பயணிகளை இறக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகரக்குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மனு அளித்தனர். பொதுமக்களின் அடிப்படை தேவையான கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துச் செல்ல வேண்டும் என்ற விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story