கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இளம் ஹாக்கி வீரர் கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இளம் தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் தகுதி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஹாக்கி பயிற்சி பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற மாரீஸ்வரனுக்கு, தேவையான விளையாட்டு உபகரணங்களை, கனிமொழி எம்.பி. அவர்கள் வழங்கி, பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் FIH ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான, இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு மாரீஸ்வரன் சக்திவேல் தேர்வாகியுள்ளார். நாளை தொடங்கவுள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ள மாரீஸ்வரன் சக்திவேல், இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி. அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சாதனை புரிந்த மாரீஸ்வரன் சக்திவேலுக்கு, கருணாநிதி : எ லைஃப் (Karunanidhi : A Life) என்ற புத்தகம் மற்றும் நிதியுதவி வழங்கிப் பாராட்டிய கனிமொழி எம்.பி., சிறப்பாக விளையாடி பிற்காலத்தில் அதிகளவிலான தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேனுகாலட்சுமி, பொருளாளர் கே.ராஜராஜன், இணை செயலாளர்கள் எஸ்.திருமால்வளவன் மற்றும் டி.கிலெமண்ட் லூர்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu