கோவில்பட்டி செயின் பறிப்பு வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கோவில்பட்டி செயின் பறிப்பு வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுரேஷ்.

கோவில்பட்டி செயின் பறிப்பு வழக்கில் 8 வருடமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் வருடம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சிலை முன்பு, கோவில்பட்டி புதுக்கிராமம் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகளிடம் ஒன்றேமுக்கால் பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வழக்கில் சென்னை கே.கே நகரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் கைதான சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 16.12.2015 அன்று மேற்படி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், செயின் பறிப்பு வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சுரேஷை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story