கடன் தொல்லையால் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (41). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரணி செல்வி (39). இவர் லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா மகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர். பெருமாள்நகரில் புதிதாக வீடு கட்டிய ராஜபாண்டி கடந்த ஜூலை மாதம் அந்த வீட்டில் குடும்பத்தோடு குடியேறி உள்ளார். வீடு கட்டுவதற்காக ராஜபாண்டி தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தாராம். மேலும், சிலரிடம் அதிக வட்டிக்கும் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது
வீடு பெரிய அளவில் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ராஜபாண்டி கடன் வங்கி இருந்த நிலையில், இதுதொடர்பாக அவருக்கும், மனைவி பரணி செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. தகுதிக்கு மீறி கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமா? என அவர் அடிக்கடி ராஜபாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி வரை லாயல் மில் காலனியில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் ராஜபாண்டியும், பரணி செல்வியும் இருந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களது குழந்தைகள் வந்தவுடன் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். மனோஜ் குமார் கடையில் வியாபாரத்தை கவனித்துள்ளார். உமா மகேஸ்வரி தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்ட மனோஜ்குமார் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்ததால், அவர் கதவை தட்டி பார்த்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் இருந்துள்ளது. மேலும், தனது தந்தை மற்றும் தாய் செல்போன் எண்களை அவர் பல முறை தொடர்பு கொண்டபோதும் நீண்ட நேரமாக பதில் அளிக்காத நிலை இருந்துள்ளது.
இதனால், சந்தேகமடைந்த மனோஜ்குமார் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டின் உள்ளே பரணி செல்வி கழுத்தை அறுக்கப்பட்ட நிலையிலும், ராஜபாண்டி கழுத்தில் கத்திக்குத்து விழுந்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதையடுத்து இருவரது சடலங்களையும் மீட்ட கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். கணவன், மனைவி இறப்பு குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அதிக கடன் இருப்பது தொடர்பாக ராஜபாண்டிக்கும், பரணி செல்விக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜபாண்டி கத்தியால் பரணி செல்வியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கணவன்-மனைவி இறந்த நிலையில் அவர்களது 19 வயது மகன் மனோஜ்குமார், 15 வயது மகள் உமா மகேஸ்வரி ஆகியோர் தற்போது எந்தவித ஆதரவும் இல்லாமல் தவித்து வருவது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu