மாநில செஸ் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி ஆசிரியைக்கு பாராட்டு
செஸ் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த கோவில்பட்டி ஆசிரியை மணிமொழி நங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் சார்பில் மாதம்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின்போது, பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், நகைச்சுவை பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டு அவர் வாழ்வியல் தொடர்புடைய தலைப்பில் பேசி வருவது வழக்கம்.
அதன்படி, கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 69 ஆவது மாதாந்திர கூட்டம் என்.கே. மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய நல்லாசிரியை விருதாளர் விநாயக சுந்தரி தலைமை வகித்தார். காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை உலகம்மாள் முன்னிலை வகித்தார். மகிழ்வோர் மன்ற காப்பாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தின்போது, முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற அரசு ஊழியருக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கோவில்பட்டி இலக்குமி ஆலை துவக்கப்பள்ளி ஆசிரியை மணிமொழிநங்கைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.வாசிப்பதை நேசிப்பவருக்கான நினைவு பரிசு சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ மாணவிகளின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சரஸ்வதி ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவியரசு கண்ணதாசன் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் மகிழ்வுரையாற்றினர். கூட்டத்தில், மகிழ்வோர் மன்ற இயக்குநர் ஜான் கணேஷ், மன்ற காப்பாளர்கள் சேர்மதுரை, மோகன்ராஜ், உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் பொன்ராஜ் பாண்டியன், முருகன், ஆசிரியர்கள் ராஜசேகர், அருள் காந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்ற காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.
மாநில அளவிலான செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ள ஆசிரியை மணிமொழிநங்கை பல்வேறு இடங்களில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu