Kovilpatty House Theft கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ. 25 லட்சம் நகைகள் கொள்ளை
கொள்ளை நடைபெற்ற வீட்டில் சிதறிக் கிடந்த பொருட்கள்.
Kovilpatty House Theft
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (62). தொழிலதிபரான இவர், மதுரையில் ஹோட்டல் வைத்து இருந்தார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக் (40). தேனியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கார்த்திக் தேனியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருவதால் சந்திரமோகனும், அவரது மனைவியும் மட்டும் கோவில்பட்டி கணேஷ்நகரில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 27 ஆம் தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர்.
வீட்டு வளாகத்தில் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அதேபகுதியைச் சேர்ந்த வாட்சுமேன் நடராஜன் என்பவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி வந்தார். இந்நிலையில் அவர், நேற்று தண்ணீர் ஊற்ற வீட்டிற்கு சென்ற போது வீட்டிற்கு காம்பவுன்ட் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுகுறித்து நடராஜன், தேனியில் உள்ள தொழிலதிபர் சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 62 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகள் உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
சந்திரமோகன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட நபர்கள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu