Kovilpatty Heavy Rain கோவில்பட்டி பகுதியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் பாதிப்பு

Kovilpatty Heavy Rain   கோவில்பட்டி பகுதியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் பாதிப்பு
X

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.

Kovilpatty Heavy Rain தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி காணப்படுகிறது.

Kovilpatty Heavy Rain

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் இந்த பலத்த கனமழை காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அந்தப் பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் போக்குவரத்து காவலர்கள் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இதை போன்று கிருஷ்ணா நகரில் உள்ள சுரங்க பாலம் , இலுப்பையூரணி ரெயில்வே சுரங்க பாலம் உள்ள சுரங்க பாலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் மழை நீர் காற்றாற்று வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது.

Kovilpatty Heavy Rain


கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே புளியமரம் ஒன்று வேரோடு முறிந்து சாய்ந்து கீழே விழுந்தது.

கோவில்பட்டி பகுதியில் 34 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இளையரனேந்தல் சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அந்தச் சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளது. அத்தை கொண்டான் கண்மாயில் இருந்து அதிக அளவு வெளியேறும் மழை நீர் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது.

மேலும் பணிமனைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் சாலையைக் கடந்து செல்ல முடியாத சூழலாலும் பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுத்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோவில்பட்டி தூத்துக்குடி சங்கரன்கோவில் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் இயக்க முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதனால் தற்போது கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் வராததால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் முத்துநகர் விரைவு ரயில் ஆகியவை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில் பயணிகள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் தவித்து வருவோரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த சூழலில் நேற்று மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே புளியமரம் ஒன்று வேரோடு முறிந்து சாய்ந்து கீழே விழுந்தது. தீயணைப்பு நிலையம் அருகே டூரிஸ்ட் வேன் ஸ்டாண்ட் உள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் டூரிஸ்ட் வேன் ஒன்று முற்றிலும் உருக்குலைந்து சேதமடைந்தது. வேனில் இருந்த டிரைவரும் கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு நிலைய மீட்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் கோவில்பட்டி டு திருநெல்வேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது