கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவு அரங்க திறப்பு விழா...
நினைவு அரங்க திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.
"கரிசல் காட்டு இலக்கியத்தின்" முன்னோடி என அழைக்கப்படும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி தனது 99 ஆவது வயதில் புதுச்சேரியில் வைத்து இயற்கை எய்தினார்.
இதன் தொடர்ச்சியாக, வட்டார பேச்சு வழக்கை, அதற்குரிய உயரிய இடத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் பறைசாற்றிய கி. ராஜாநாராயணனுக்கு அவர் பிறந்த ஊரான கோவில்பட்டியில் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் கோவில்பட்டியில் ரூ. 1. 50 கோடி மதிப்பில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு நினைவு அரங்கம் கட்டப்பட்டது. மேலும், எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படித்த பள்ளி எவ்வாறு இருந்ததோ அதே அடிப்படையில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், கி. ராஜநாராயணன் நினைவு அரங்கை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, கோவில்பட்டியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
கலை இலக்கிய விழா நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
கேரள மாநிலத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இலக்கியவாதிகளை கொண்டாடக்கூடிய நிலை நமக்கு இல்லையே என்று ஏங்கி இருக்கிறோம். எத்தனையோ பேர் எழுதுவதற்கு காரணமாக இருந்த கி.ரா. அவர்களுக்கு இத்தகைய மரியாதையை செலுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எப்பொழுதுமே மனிதர்களை நேசிக்கக்கூடிய ஒருவர். கட்சி வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டு இருக்ககூடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏவுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கனிமொழி எம்.பி. பேசினார்.
17 எழுத்தாளர்கள் பங்கேற்பு:
நிகழ்ச்சியில், சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், பூமணி, தர்மன் மற்றும் கோணங்கி, பவா செல்லத்துரை, புதுவை இளவேனில், கவிஞர் இளையபாரதி உள்ளிட்ட 17 எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
மேலும், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடம்பூர் ராஜூ, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கோரிக்கை:
விழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், ஒருவர் சிறப்பாக வாழ்ந்தார் என்பது அவர் வாழும் காலத்தை விட அவருடைய மறைவிற்குப் பிறகு அவரது சிறப்பு புலப்படும் என்றும், தமிழர் பண்பாட்டினை காக்க பாடுபட்ட கி. ராஜநாராயன் நினைவு அரங்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தன்னிடம் தெரிவித்தாக கூறினார்.
மேலும், எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, கனிமொழி எம்.பி.க்கு அவர் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசும்போது, இன்றைக்கு மிகச்சிறப்பாக கட்சி வேறுபாடுகளை கடந்து விழாவில் கலந்து கொண்டு இருக்ககூடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu