கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவு அரங்கம் நாளை திறப்பு..

K Rajanarayanan
X

K Rajanarayanan

K Rajanarayanan-கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் நினைவு அரங்கத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.

K Rajanarayanan-கரிசல் இலக்கியத்தின் தந்தையான எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் கோவில்பட்டியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதிதாக நினைவு அரங்கம் கட்டப்பட்டது.

கி. ராஜநாராயணனின் நினைவு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாளை (2-12-2022) திறந்து வைக்கிறார். இந்த நிலையில், கி. ராஜநாராயணனின் நினைவு அரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. நினைவரங்கம் அழகிய புல்வெளிகளுடன் டிஜிட்டல் நூலகம், நிர்வாக அறை, நூலகம், கற்சிலை, கண்காட்சி மற்றும் முழுவுருவ வெண்கலச் சிலையுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நினைவரங்கம் மற்றும் முழுவுருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (02.12.2022) காலை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். முதல்வரால் நினைவரங்கம் திறந்து வைக்கப்பட்ட உடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் முயற்சியால் நினைவு அரங்கத்தில், கி. ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக்கப்படும்.

நினைவு அரங்கத்தில் உள்ள நூலகத்தில் அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் வைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் கு. அழகிரிசாமி, சோ .தர்மன் உள்ளிட்ட கரிசல் இலக்கியவாதிகளின் புத்தகங்களும் படிப்பதற்காக வைக்கப்படும். மேலும் டிஜிட்டல் அரங்கில் கி. ராஜநாராயணனின் புத்தகங்கள் அனைத்தும் படிப்பதற்கும், காட்சிக்கும் வைக்கப்படும்.

கோவில்பட்டியில் 15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற 5 எழுத்தாளர்கள் உள்ளனர். எனவே, கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) தம்புரான் தோழன், உதவி செயற்பொறியாளர் பரமசிவம், கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கல்வெட்டு சர்ச்சை: இதற்கிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் நினைவு அரங்க திறப்பு விழா கல்வெட்டில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கடம்பூர் ராஜூவின் பெயர் இடம்பெறவில்லை என புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தால் நாளை நடைபெறும் விழாவில் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. இதைதொடர்ந்து, கல்வெட்டு விவகாரம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. உடனே, அவர் தலையிட்டு ஏற்கெனவே, தயாராக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்கு பதிலாக கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பெயர் சேர்க்கப்பட்ட புதிய கல்வெட்டை நினைவு அரங்கில் அமைக்க முடிவு செய்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!