ராணுவ வீரர் எனக் கூறி கோவில்பட்டி வியாபாரியிடம் ரூ. 65 ஆயிரம் மோசடி

ராணுவ வீரர் எனக் கூறி கோவில்பட்டி வியாபாரியிடம் ரூ. 65 ஆயிரம் மோசடி
X

ராணுவ வீரர் எனக் கூறிய சாகில்குமாருக்கு கூகுள் பே மூலம் ரூ. 65 ஆயிரம் அனுப்பப்பட்டதற்கான ஆதாராம்.

கோவில்பட்டி வியாபாரியிடம் ராணுவ வீரர் எனக் கூறி 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் தனக்கு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, சாத்தூரில் உள்ள ஒரு நபருக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும் என்றும் உங்களது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றும் கூறியபடி அந்த நபர் அறிமுகம் ஆகி உள்ளார். அதைத் தொடர்ந்து கார்த்திகேயன், ராணுவ வீரரான சாகில் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை அனுப்பி உள்ளார்.

இதைத் தொடர்ந்து கார்த்திகேயனிடம் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மோசடி நபர் சாகில் குமார் தனக்கு இந்த சோபா மற்றும் இந்த கட்டில் பிடித்துள்ளது என ஒரு குறிப்பிட்ட படத்தை அடையாளம் காட்டி அதற்கான விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

80,000 என்ற உடன் முதலில் 65,000 கூகுள் பேய் மூலம் அனுப்புகிறேன் என்று கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் கூகுள் ஸ்கேனரை அவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயன் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட மோசடி நபர் நான் ராணுவத்தில் இருப்பதால் தங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முடியாது என்றும் தங்களது பெர்சனல் நம்பரை தாருங்கள் அதன் மூலம் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறி உள்ளார்.


இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகன் அருண்குமாரின் வங்கி கணக்கு எண்ணை சாகில் குமாருக்கு அனுப்பி உள்ளார். அதில் இரண்டு தடவை ஒரு ரூபாய், ஒரு ரூபாய் என பனம் போட்டுவிட்டு சாகில் குமார் அடுத்த கட்டமாக தான் ரூபாய் 65 ஆயிரம் அனுப்புவதாக கூறி உள்ளார்.

பின்னர், கூகுள் பேயின் மூலம் 65 ஆயிரம் ருபாய்க்கான லிங்க்கை அனுப்பி கார்த்திகேயன் மகன் வங்கி கணக்கில் இருந்து உடனே 65,000 ரூபாய் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சாகில் குமாரை தொடர்பு கொண்டு எங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு எனக்கு கூகுள் பே மூலம் 500 ரூபாய் போடுங்கள் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து 35 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் அனுப்புகிறேன் என மீண்டும் அதே போல் லிங்க் அனுப்பி உள்ளார். தான் மோசடி செய்யப்படுவதாக சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன், தனது மகன் வங்கி கணக்கில் இருந்து சாகில் குமார் நூதன முறையில் பணத்தை திருடியதை தெரிந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு காவல் துறையில் மோசடி நபர் சாகில் குமார் குறித்து புகார் அளித்துள்ளார். கூகுள் பே மூலம் கொடுத்து ரூபாய் 65 ஆயிரத்தை ராணுவ வீரர் என்று கூறி மோசடி செய்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!