கடையை திறங்கப்பா.. டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள்...

கடையை திறங்கப்பா.. டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள்...
X

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள்.

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த மதுபானப் பிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (பார்கள்) செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பார் உரிமையாளர்களிடம் சிலர் மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் தொகை கேட்டதாகவும் , அதற்கு பார் உரிமையாளர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவில்பட்டி பகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகள் இன்று திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால், பகல் 12 மணிக்கு மது வாங்குவதற்காக வேகமாகச் சென்ற மது பிரியர்கள் சிலர் கடை திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால், வழக்கமாக மது அருந்தும் பழக்கம் கொண்ட மதுப்பிரியர்கள் கடையை சீக்கிரம் திறங்கள் எனக் கூறி கடையின் முன்பு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெகுநேரமாகியும் கடை திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால், கோவில்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விவகாரம் குறித்து, மதுபானக்கூட உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

பணம் கேட்டு மிரட்டியவர்களிடம் அதற்கான தொகையை பார் உரிமையாளர்கள் மாமூலாக தரவில்லை என்பதால் இது போன்ற நடவடிக்கை எடுத்து மிரட்டுகின்றனர். ஏற்கெனவே பார் டெண்டர் எடுக்கும் போது மூன்று மாதத்திற்கான தொகையாக 3 லட்சத்து 60 ஆயிரத்தை டி.டி. யாக எடுத்து கொடுத்துள்ளோம். மாதம்தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் டெண்டர் தொகையை செலுத்துகிறோம்.

அதுபோக பார் கடை வாடகை மாதந்தோறும் 15 ஆயிரம் , ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், இதர செலவுகள் என ஐம்பதாயிரம் வரை செலவு செய்கிறோம். ஒரு மாதத்துக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்த பிறகு தான் எங்களது லாபத்தை பார்க்க வேண்டி உள்ளது. இந்தநிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த கும்பல் மாதம் தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாமூல் கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

மாமுல் தர மறுத்த காரணத்தினால் பார் உரிமையாளர்களை மிரட்டுவதற்காக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூட வைத்து உள்ளனர். தவறான அணுகுமுறையால் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என மதுபானக்கூட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!