பிறந்த நாளில் மாணவர்களுக்கு திருக்குறள் வழங்கும் கோவில்பட்டி பள்ளி

பிறந்த நாளில் மாணவர்களுக்கு திருக்குறள் வழங்கும் கோவில்பட்டி பள்ளி
X

கோவில்பட்டி நாடார் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிறந்தநாளில் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்குகிறது அந்த பள்ளி நிர்வாகம்.

உலகம் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாளை கொண்டாட தவறுவதில்லை. சிலர் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் பழக்கம் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு அந்த நாளில் வித்தியாசமான பரிசு வழங்கி பாராட்டுபவர்களும் உண்டு.

முக்கியப் பிரமுகர்களின் பிறந்தநாளில் அவர்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களது மனதை கவரும் வகையிலும் வித்தியாசமான முறையில் பரிசுகள் வழங்குவது உண்டு. அந்த வகையில், கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளியில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பிறந்தநாளில் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது என்றே கூறலாம்.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள் அனைவரும் 133 அதிகாரத்தில் உள்ள 1330 திருக்குறளை படித்து குறள்நெறி வழி நடக்கவும், மாணவர்களின் கல்வி மேம்படவும், நாடார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாணவர்களின் பிறந்தநாள் அன்று திருக்குறள் புத்தகத்தை பள்ளி நிர்வாகமே வழங்குகிறது.

அதன்படி, கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பிறந்தநாள் மாணவர்களான 8 ஆம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ, 7 ஆம் வகுப்பு மாணவி ஜனனி, 5 ஆம் வகுப்பு மாணவர் அஜய்குமார், 2 ஆம் வகுப்பு மாணவி சிவசக்தி, 5 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ ஆகியோருக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அமலா தேவி,ஜெயச்சந்திரா,பூங்கொடி,மலர்க்கொடி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் பிறந்தநாளில் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!