கோவில்பட்டி தனியார் சந்தை விவகாரம்: தற்காலிக அனுமதி வழங்க கோட்டாட்சியர் மறுப்பு

கோவில்பட்டி தனியார் சந்தை விவகாரம்: தற்காலிக அனுமதி வழங்க கோட்டாட்சியர் மறுப்பு
X

கோவில்பட்டி தினசரி சந்தை பிரச்சினை தொடர்பாக  கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் சமாதானகூட்டம் நடைபெற்றது.

உரிய அனுமதி பெற்றாமல் மட்டுமே கோவில்பட்டி அருகே தனியார் சந்தைக்கு அனுமதி தர முடியும் என கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்பட்ட தனியார் சந்தைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகு சந்தையை நடத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்களில் வியாபாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், திட்டங்குளம் ஊராட்சியில் தனியார் தினசரி சந்தை நடத்தும் விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் இன்று சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தனியார் சந்தை நிர்வாகிகள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. சிறப்பு அனுமதி கொடுத்து தங்களது சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் மற்றம் சந்தை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி பேசும்போது:-

உரிய அங்கீகாரம் பெற்றால் மட்டும் தான் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி தர முடியும், தற்காலிகமாக அனுமதி தர முடியாது. மேலும் அனுமதி பெற தேவையான துறைகளில் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும், அதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பம் செய்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், மார்க்கெட் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சில உத்தரவுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது. முறையாக உரிய அனுமதி பெறும் வரை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்படும் தினசரி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும்படி கோட்டாட்சியர் மகாலட்சுமி வியாபாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ்குமார், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர்கள் சிலுவை அந்தோணி, கண்ணன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது