பரிசு விழுந்ததாகக் கூறி அர்ச்சகரிடம் ரூ. 14 லட்சம் மோசடி.. கோவில்பட்டியில் 3 பேர் கைது…

பரிசு விழுந்ததாகக் கூறி அர்ச்சகரிடம் ரூ. 14 லட்சம் மோசடி.. கோவில்பட்டியில் 3 பேர் கைது…
X
கோவில்பட்டியில் அர்ச்சகரிடம் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ. 14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியை சேர்ந்தவர் ராமசுந்தரம் (வயது 40). இவர், கோவில்பட்டியில் உள்ள 4 கோயில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ராமசுந்தரத்தை சந்திக்க ஆம்னி வேனில் வந்த நபர்கள் சிலர் மெத்தை, தலையணை, பேன் போன்றவற்றை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு குலுக்கல் முறையில் பரிசு விழும் என்று கூறி சென்றுள்ளனர்.


மேலும், ராமசுந்தரத்தின் செல்போன் எண்ணையும் அவர்கள் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ராமசுந்தரத்திடம் இருசக்கர வாகனம் பரிசு விழுந்துள்ளதாகவும் மற்றும் பல காரணங்களை கூறி அவைகளுக்கு முன்பணம், வருமானவரி போன்றவை செலுத்த வேண்டியுள்ளது என கூறி உள்ளனர்.

அதை காரணமாக வைத்து பல வங்கி கணக்குகள் மூலம் சிறிது, சிறிதாக 14 லட்சத்து 28 ஆயிரத்து 860 ரூபாய் மோசடி செய்து ஏமாற்றியதாக ராமசுந்தரம் NCRP-இல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்து உள்ளார். ராமசுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இதுதொடர்பாக, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் உட்பட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், ராமசுந்தரத்தை மோசடி செய்தது தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தை சேர்ந்த முத்துகுமார் (37) என்பது தெரியவந்தது. அவரை சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.


முத்துக்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிரத்னம் (36) என்பவரை அவரது வீட்டின் முன்பு வைத்தும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மருதுபாண்டியன் (38) என்பவரை சங்கரன்கோவிலில் வைத்தும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், 2 டாங்கில் மற்றும் ரொக்கப் பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேரும் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் கைதான முத்துகுமார் மீது ஏற்கெனவே தூத்துக்குடி சைபர்குற்ற பிரிவு காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த வழக்கிலும் முத்துக்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து சைபர் குற்ற பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மூன்று பேரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!