கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

கோவில்பட்டி அருகே கல்குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி அய்யனார் ஊத்து ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
X

கோவில்பட்டி அருகே அய்யனார் ஊத்து ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் ஊத்து ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் சண்முகையா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சையத் மகபூப் லால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 16 தீர்மானங்கள் வைக்கப்பட்டன. அப்போது, கிராம மக்கள் கனிம வளம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு தொழிலும் அய்யனார் ஊத்து எல்லைக்குள் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் திரண்டு கல்குவாரி அமைக்க கூடாது என முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு 17 ஆவது தீர்மானமாக கனிம வளத்தையும் சுற்றுச்சூழலையும் மற்றும் பொதுமக்களையும் பாதிக்கும் எந்த ஒரு தொழிலும் அய்யனார் ஊத்து எல்லையில் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கிராம மக்கள் வரவேற்றனர்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸார் அய்யனார் ஊத்து ஊராட்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 22 March 2023 1:17 PM GMT

Related News