கோவில்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 80 வயது முதியவர்..
தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் சங்குமணி.
பொதுவாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிப்போர், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து மனு அளிப்பது வழக்கம்.
சிலர், நீண்ட நாட்களாக கோரிக்கை நிறைவேறாவிட்டால், அரசு அதிகாரிகளின் பார்வையை தங்களது பக்கம் திரும்புவம் கையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபடுவது உண்டு. சிலர் விளம்பர மோகத்தில் வித்தியாசமான போராட்டங்களிலும் ஈடுபடுவது உண்டு.
இந்த நிலையில், கோவில்பட்டி அருகே 80 வயது முதியவர் ஒருவர் தனக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் தாமதம் நிலவி வருவதாகக் கூறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்குமணி. 80 வயதான இவர், தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
மேலும், குடிநீர் இணைப்பு வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் இழுத்தடிப்பதாகவும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இன்று காலை ஊராட்சி மன்றத் தலைவரின் நடவடிக்கையை கண்டித்து அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் முதியவர் சங்குமணி ஏறினார்.
பின்னர், அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து ஊர் மக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் முதியவரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி பத்திரமாக அவரை இறக்கி மீட்டனர்.
மேலும், முதியவர் சங்குமணியிடம் அவரது கோரிக்கை குறித்த விவரங்களை அரசு அதிகாரிகளும், போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu