கழுகுமலை எண்ணெய் ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. 5985 லிட்டர் எண்ணெய் பறிமுதல்...

கழுகுமலை எண்ணெய் ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. 5985 லிட்டர் எண்ணெய் பறிமுதல்...
X

கழுகுமலை எண்ணெய் ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 5985 லிட்டர் எண்ணெய் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், கயத்தாறு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸ் அடங்கிய குழுவினர் கழுகுமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அந்த ஆய்வின் போது, சங்கரன்கோவில் சாலையில் உள்ள மூன்று எண்ணெய் ஆலைகளில், உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 2535 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1155 லிட்டர் கடலை எண்ணெய், 2295 லிட்டர் பாமொலின் எண்ணெய், 1100 உபயோகப்படுத்தப்பட்ட காலி டின்கள் மற்றும் 70 உபயோகப்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

உணவகங்கள் நிறுத்தம்:

மேலும், கழுகுமலையில் கேப்டன் மெஸ், பிரேவோ உணவகம் ஆகிய உணவகங்கள் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் தொழில் நடத்திவருவது கண்டறியப்பட்டதால், அவற்றை மூடிவிட்டு, உணவு பாதுகாப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பின்னர் உணவகத்தினைத் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், கேப்டன் மெஸ்ஸில் 12 கிலோ கலர் சேர்க்கப்பட்ட சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்:

சபரிஸ் என்ற சூப்பர் மார்க்கெட்டில், 10 கிலோ காலாவதியான பருப்பு மற்றும் மாவு உணவுப் பொருட்களும், 7 லிட்டர் காலாவதியான குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியில் சன் இஞ்சி மற்றும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தேநீர் கடைகளில், நியூஸ் பேப்பரில் திண்பண்டங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, தலா ரூ.1000 அபராதம் விதித்து உத்திரவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஏரல் பகுதியிலும் ஆய்வு:

இதைப்போல், ஏரல் பகுதியிலும் அந்தப் பகுதியின் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்த போது, பிரின்ட் செய்யப்பட்ட காகிதத்தில் திண்பண்டங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்து உத்திரவிடக் கோரி நியமன அலுவலருக்கு அந்தப்பகுதி பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவொரு வணிகரும் லேபிள் இல்லாமலும், பொட்டலமிடாமலும் சமையல் எண்ணெய் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் எண்ணெயை மீண்டும் பொட்டலமிடக்கூடாது என்றும், உணவகங்களில் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பண்டங்களைப் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது என்றும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுத் தொழில் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகின்றது. மீறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், மாவட்டத்தில் நுகர்வோர் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை, 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ தெரிவிக்கலாம். தங்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!