கோவில்பட்டியில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
கோவில்பட்டி அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த தொழிலதிபர் கார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு-கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் அய்யாதுரை. தொழிலதிபரான இவர் நிதிநிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது மருமகன் உத்தண்டு என்பவர் குவாரிகளில் இருந்து சரள் மண் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தண்டுக்கும், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை லாரிகளில் அள்ளிச் செல்வது தொடர்பாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, கயத்தாறு-கடம்பூர் சாலையில் உள்ள தொழிலதிபர் அய்யாதுரையின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசியும், பெட்ரோலை ஊற்றியும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.
கார் தீப்பற்றி எரிவதை அறிந்த அய்யாத்துரை குடும்பத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அய்யாதுரையின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகர் குருராஜின் ஆதரவாளரான மந்திரமூர்த்தி என்பவருக்கு கார் எரிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. தலைமறைவான மந்திர மூர்த்தி உள்ளிட்ட சிலரை கயத்தாறு காவல் நிலைய போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே, தன்னை சிலர் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறி மந்திரமூர்த்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu