கோவில்பட்டி நகராட்சி சந்தையில் போலி ரசீது மூலம் வாகனக் கட்டணம் வசூலிப்பதாக புகார்…

கோவில்பட்டி நகராட்சி சந்தையில் போலி ரசீது மூலம் வாகனக் கட்டணம் வசூலிப்பதாக புகார்…
X

கோவில்பட்டி நகராட்சி சந்தை முகப்பு.

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் போலி ரசீது மூலம் வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் செயல்படும் இந்த சந்தைக்கு கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் கொம்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வாகனங்களில் பொருட்கள் கொண்டு வருபவர்களுக்கு வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வாகனக் கட்டணம் வசூல் செய்ய ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுத்து வந்தவர்கள் வசூலித்து வந்தனர். ஆனால் தற்பொழுது அதற்கான ஏலம் சில காரணங்களினால் விடப்படவில்லை என்பதால் நகராட்சி ஊழியர்கள் வாகனங்களுக்கான கட்டணத்தினை வசூல் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், சந்தைக்கு பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு போலியான ரசீது வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முன்பு பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போன நிலையில் தற்போது நகராட்சிக்கு குறைவான வருவாய் மட்டும் கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், நகராட்சி ஊழியர்கள் மற்றும் அவர்கள் உதவியுடன் சிலர் போலியாக ரசீது அச்சடித்து வாகனக் கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் இந்த செயலால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர் செல்லத்துரை என்பவர் நகராட்சி ஆணையாளர் ராஜாராமிடம் இன்று ஒரு புகார் மனுவை அளித்தார்.

போலி ரசீது விவகாரம் குறித்து உரிய விவசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லத்துரை மனுவில் தெரிவித்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட ஆணையாளர் ராஜாராம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செல்லத்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் உள்ள நகராட்சி தினசரி சந்தையின் உள் நுழைவாயில் வாகன கட்டணம் 65 லட்ச ரூபாய் வரை ஏலம் போன நிலையில் இன்றைக்கு தினமும் வெறும் 3500 மட்டும் வருவாய் கிடைப்பதாக நகராட்சி அலுவகத்தில் கூறுகின்றனர்.

வாகனக் கட்டண வசூலில் ஈடுபடும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் போலியாக ரசீது அச்சடித்து வசூல் செய்யவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் வாகனங்களுக்கு வழங்கப்படும் ரசீதில் கட்டண விவரம் உள்ளது. ஆனால், வசூலிப்பவர் பெயர் என ஏதேனும் ஒரு கையெழுத்து உள்ளது. ஆணையாளர் என்ற இடத்தில் எந்தவித சீல் மற்றும் கையெழுத்து இல்லை.

போலி ரசீது மூலம் கட்டணம் வசூலிப்பதால் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லத்துரை தெரிவித்தார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்