மலேசியாவில் இறந்த கோவில்பட்டி தொழிலாளி.. உடலை கொண்டு வர ரூ. 2 லட்சம் கேட்பதாக புகார்...

மலேசியாவில் இறந்த கோவில்பட்டி தொழிலாளி.. உடலை கொண்டு வர ரூ. 2 லட்சம் கேட்பதாக புகார்...
X

மலேசியாவில் உயிரிழந்த கோவில்பட்டி தொழிலாளி அய்யாத்துறையின் குடும்பத்தினர்.

மலேசியாவில் ஹோட்டல் வேலைக்குச் சென்ற தொழிலாளி இறந்த நிலையில், அவரது உடலைக் கொண்டு வர 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி சொர்ணம். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட வறுமைச் சூழலை கருதி அய்யாதுரை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.


வேலைக்கு சென்ற அவர் தொடர்ந்து தனது மனைவி சொர்ணத்திற்கும், மகள்களுக்கும் அடிக்கடி போன் செய்து பேசி உள்ளார். மேலும், பணமும் அனுப்பி வைத்து உள்ளார். கடந்த மாதம் தனது மனைவி சொர்ணத்திடம் தொலைபேசியில் பேசும் பொழுது அய்யாத்துரை, தன்னை சிலர் கொடுமைப் படுத்துவதாகவும் வேறு யாரிடமாவது விற்று விடுவதாக அங்குள்ளவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில் கடந்த எட்டாம் தேதி இரவு திடீரென அங்குள்ள ஹோட்டல் உரிமையாளர், சொர்ணத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அய்யாத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதை அறிந்த சொர்ணம் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கினர். செய்வதறியாத திகைத்து நின்ற குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது தந்தை இறப்பிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அய்யாத்துரையின் மகள் அனிஷா கூறியதாவது:

எங்கள் தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. எங்கள் தந்தையின் இறப்பில் உள்ள மர்மம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மலேசியாவில் இறந்த எங்கள் தந்தையின் உடலை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story