கோவில்பட்டி அரசு கல்லூரியில் தண்ணீர் வசதி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்

கோவில்பட்டி அரசு கல்லூரியில் தண்ணீர் வசதி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்
X

கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு போர்வெல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்த காரணத்தினால், கடந்த 10 தினங்களாக தண்ணீர் விநியோகம் தடைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவிகள் மாற்று ஏற்பாடு செய்து தர வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்வெல் மோட்டார்களை சரி செய்த பின்னர்தான் தண்ணீர் விநியோகம் சீராகும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனராம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வரை தண்ணீர் வசதி இல்லாமல் எப்படி கல்லூரி செயல்பட முடியும் என்றும் பெண்கள் கழிப்பறையில் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், கல்லூரியில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வசூலிக்கப்படும் கல்விக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரிக்கு அரசு பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவ, மாணவியிடம் உங்களது கோரிக்கைகளை நிறைவேத்தி தருவோம் என்று அவர்கள் உறுதி அளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு