கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டம்

கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டம்
X

கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்.

கோவில்பட்டியில் ரேஷனில் சீராக பொருட்கள் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்குவதில்லை என்றும், ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை தொழில்நுட்ப கோளாறு என்று கூறி பொருட்கள் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் குறைவான பொருட்களை வழங்கிவிட்டு அதிகமான பொருட்கள் வழங்கியதாக குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் வருவதாகவும், பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்க சென்றால், டீ தூள், சோப்பு, மைதா, ரவை என மற்ற பொருட்களையும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, கோதுமை சரிவர வழங்கப்படவில்லை என்றும், நியாய விலைக் கடைகளில் கால தாமதம் செய்யாமல், சரியான அளவில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது மனுவை வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கச் சென்றபோது, அங்கு அறை பூட்டப்பட்டிருந்ததால் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து வட்டாட்சியர் வசந்த மல்லிகா மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டிய அவர்கள் அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் வசந்த மல்லிகா உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட தேமுதிகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்