ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கோவில்பட்டி ராணுவ வீரர் தற்கொலை
தற்கொலை செய்துக் கொண்ட கோவில்பட்டி ராணுவ வீரர் மணித்துரை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பவர் மகன் மணித்துரை (28). இவர் 2015ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில் மணித்துரை கடந்த 1 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த போது திடீரென துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மணித்துரைக்கு கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு தான் உதயசுருதி என்பருடன் திருமணம் ஆகியது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மணித்துரை பணியில் இருக்கும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவு பணத்தை இழந்த காரணத்தினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மணித்துரை தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கீழக்கரந்தையில் இருக்கக்கூடிய தனது தாய் கனக வேலம்மாளுக்கு செல்போனில் அழைத்துப் பேசி உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணம் இழந்தது குறித்தும், ஆன் லைனில் விளையாட பலரிடம் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை என்றும் இனி நான் வாழ விரும்பவில்லை என பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சத்தம் இரண்டு முறை கேட்டதற்கு பிறகு மணித்துரை பேசவில்லை என்றதும் அவர் தாய் அதிர்ச்சியில் உறைந்து கத்தி கதறி அழுது உள்ளார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் மணித்துரை உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. ராணுவ வீரர் பணித்துரை விடுமுறைக்காக கடந்த 1ம் தேதி ஊருக்கு வர இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் அவரது உடல் மட்டுமே ஊருக்கு வந்து சேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்
ஆன்லைன் ரம்மி விளையாடினால் அனைத்தையும் இழந்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணித்துரையின் தந்தை வேலுப்பிள்ளை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மணித்துரையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குடும்பத்தை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu