கோவில்பட்டியில் கண்டுகொள்ளப்படாத கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பயணம்!
கோவில்பட்டியில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. தூத்துக்குடியை விட சிறப்பான சாலை போக்குவரத்து வசதியை கொண்டுள்ளதால் கோவில்பட்டி நகரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதை கருத்தில் கொண்டு கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கோவீல்பட்டியில் தனியார் கல்லூரிகள் உள்ள போதிலும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக கிராமங்கள் இருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை என்றே கூறலாம். அதாவது கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு கல்லூரிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து சரியாக இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் தினமும் மினி பேருந்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மினி பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் பயணிக்கும் அபாய நிலை இருந்து வருகிறது.
மினி பேருந்தில் கால்நடைகளை அடைப்பது போல எந்தவொரு பாதுகாப்பு சூழலும் இல்லாத நிலையில் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொடங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். மேலும், மினி பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் எந்தவித அச்சமும் இல்லால் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சிய போக்கை காட்டமால் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மாணவிகள் அச்சமின்றி கல்லூரிக்கு சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu