கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்
X
கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி பங்குனித் திருவிழா திருத்தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி பங்குனித்திருவிழா கடந்த 5 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று 9ஆம் திருநாள் மண்டகப்படிதாரர் கம்மவார் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.இதனையடுத்து, உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, மதிமுக தலைமை கழகச் செயலர் துரை வைகோ, பி.எஸ்.ஆர். கல்வி குழும தாளாளர் சோலைசாமி, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர் அமுதா, இந்து அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்திற்கு கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் தலைமை வகித்தார். செயலர் ஜெனரேஸ், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், இணைச் செயலர் செல்வராஜ், கம்மவார் மகாஜன சங்க மண்டலத் தலைவர் பொன்ராஜ், கம்மவார் சங்க முன்னாள் தலைவர்கள் எஸ்.ஹரிபாலகன், கனகராஜ், ஆர்.வி.எஸ்.துரைராஜ், பி.ஆர்.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருத்தேரோட்ட விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாளை (ஏப்.14) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (ஏப்.15) நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!