மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்! பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்! பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!
X
கோவில்பட்டி அருகே மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாங்குநேரியில் வீடு புகுந்து மாணவனை வெட்டிய கொடூர செய்தி தமிழகத்தை உலுக்கியது. அந்த நிகழ்வில் வடு ஆறுவதற்குள் மீண்டும் அதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தைப் போலவே தற்போது கோவில்பட்டியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10 பேர் சேர்ந்து தாக்கியுள்ள சம்பவம் இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது கழுகுமலை. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலின மாணவர் ஹரிபிரசாத் மீது அவருடன் பயிலும் சக மாணவர்கள் 10 பேர் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே இப்படி சண்டை நடைபெறுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் சாதி ரீதியிலான மோதல்தான் என்கின்றனர். ஆரம்பத்தில் இரு மாணவர்களுக்கு இடையே நடந்த சின்ன சின்ன உரசல்கள் நாளடைவில் சாதி ரீதியிலான மோதலாக மாறியுள்ளது. வேறு இரண்டு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையை விலக்கி விடச் சென்றிருக்கிறார் மாணவர் ஹரிபிரசாத்.

அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விசயத்தில் தலையிடலாம் என்று ஹரிபிரசாத்தின் மீது சண்டை திரும்பியிருக்கிறது. வழக்கம்போல அன்று மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் ஒரு கும்பல் ஹரிபிரசாத்தின் ஊருக்கு பைக்கில் சென்றுள்ளனர். லட்சுமிபுரத்தில் ஹரிபிரசாத்தின் வீட்டைத் தேடி கண்டுபிடித்துள்ளனர். அந்த நேரத்தில் ஹரிபிரசாத் வெளியே நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தவர்கள் சாதியைச் சொல்லி கடுமையாக திட்டியிருக்கிறார்கள். மேலும் ஹரிபிரசாத்தை கடுமையாக தாக்கியும் காயப்படுத்தியிருக்கின்றனர். பின்னர் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு 10 பேரும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

அக்கம்பக்கத்தினர் பார்த்து இந்த விசயத்தை ஹரியின் பெற்றோரிடம் சொல்ல உடனடியாக அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக கழுகுமலை காவல்நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவர் பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story